டி.எஸ். சேனநாயக்காவும் ஜி.ஜி.பொன்னம்பலமும் | இலங்கையில் அடையாள அரசியல் - சுதந்திர இலங்கை வரையிலான ஒரு வரலாற்று நிலைப் புரிதல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்
Description
இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது தேர்தல் 1947ம் ஆண்டு இடம்பெற்றது. பாராளுமன்றத்திற்கான 100 ஆசனங்களில் டி.எஸ்.சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களை வென்றது. டி.எஸ்.சேனநாயக்காவின் சமயோசித நடவடிக்கையினால் சுயேட்சை வேட்பாளர்களை தம்பக்கம் இழுத்து அரசாங்கத்தினை அமைத்துக்கொண்ட போதும் ஒரு நிச்சயமற்ற அரசாங்கமாகவே டி.எஸ்.சேனநாயக்காவின் அரசாங்கம் காணப்பட்டது.
டி.எஸ்.சேனநாயக்கா பிரதமரான பின்பு அவருடைய அரசாங்கத்தை தோற்கடித்து இடதுசாரிகளும் சிறுபான்மையினரும் சேர்ந்த அரசாங்கமொன்றை அமைக்கும் பொருட்டு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் கூடிய இடதுசாரிக் கட்சிகளும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் சிலரும் பொதுக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தை அமைப்பது என்று முடிவு எடுத்திருந்த போதிலும், பொதுக் கொள்கைக்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் எழுந்த முரண்பாடுகளை அடுத்து இம்முயற்சி பலனற்றுப் போய்விட்டது.
சிறுபான்மையினரின் நலனுக்காக 50:50 கோரிக்கையில் விடாப்பிடியாக நின்ற ஜி.ஜி.பொன்னம்பலம் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இடதுசாரிகளுடன் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தினை தவறவிட்டமை அவருடைய முதலாளித்துவ வர்க்க நலனின் வெளிப்பாடே எனலாம்.
டி.எஸ். சேனநாயக்கா 1947ம் ஆண்டுத் தேர்தல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு சிங்கள மக்களின் எதிர்கால அரசியல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிக நிதானமாகத் திட்டமிட்டார்.
இலங்கை இந்திய காங்கிரசும், இடதுசாரிக்கட்சிகளும் பெற்ற வாக்குகள் இந்தியத் தொழிலாளர்களுடைய வாக்குகள் என்பதை நன்கு அறிந்திருந்தார்.இவர்களுடன் தமிழ் காங்கிரசும் சேர்வது பேரினவாத முதலாளித்துவத்துக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த அவர் அன்று மேற்குலகில் வளர்ந்து வந்துகொண்டிருந்த கம்யூனிச எதிர்ப்பை தமக்குச் சார்பானதாக பயன்படுத்திக் கொண்டார். அத்தோடு சிறுபான்மையினர் விடயத்தில் தாம் மிகத் தாராளமாகச் செயற்படுவதாக பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டினார்.
#buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils #DonoughmoreConstitution #constitutionlk